''தேர்தலில் யாருக்கு ஓட்டு'' போடுவது?


ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தேசபக்தி இருப்பதில் தவறில்லை. நாம் அரசியல் சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருக்கமுடியாது.
~யார் ஆண்டால் என்ன என்ற மனப்பான்மையும்கூடாது. ''என் மக்கள்மீது வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்?" என்ற எஸ்தரைப் போலிருக்கவேண்டும் (எஸ். 8:6).

நமது முதற்கடன் ஜெபமே. அரசியலுக்குப் பின்னணியில் காணக்கூடாத சக்திகள் பலவுண்டு. ஆக நாட்டின் இன்றைய தேவை ஆன்மீகப் போராட்டமே. எனவே விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் துதி களையும் வேண்டுதல்களையும் ஏறெடுக்காது இனி நமது நாட்டில் கலகமில்லாத அமைதி வாழ்வு சாத்திய மில்லை (1தீமோ 2:1,2). தேர்தல் வேட்பாளர் அத்தனை பேருக்காகவும் ஜெபியுங்கள். நாட்டிலுள்ள கோடிக் கணக்கான வாக்காளர்களை தேவன் தொடும்படியும் பின்வரும் விடயங்களுக்காகவும் விண்ணப்பியுங்கள்.

நீதி : ஊழலும் தன்னலமுமற்ற தலைவர்கள் தேவை. அவர்கள் நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர்பெற்றி ருக்கவேண்டும். அரசியலில் இதெல்லாம் சாத்தியமல்ல என்பது சரியல்ல. ''நீதி நாட்டை உயர்த்தும். பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி" என வேதம் அழுத்திக் கூறுகிறது (நீதி 14:34). வேறு வழியில்லை.

மதச்சார்பின்மை : சொந்த விசுவாசத்தைப் பயிற்சிக் கவும் பறைசாற்றவும் மதச் சுதந்திரம் நமது சாசனத்தில் உண்டு. ஆனால் அவ்வுரிமை கொஞ்ச கொஞ்சமாக வேர் அறுக்கப்பட்டு வருகிறது. எங்கும் சென்று எவருக்கும் நற்செய்தியை அறிவித்து அவர்களை சீடராக்க இயேசு தந்த கட்டளைக்குக் கீழ்ப்படியாது கிறிஸ்தவராயிருப்பது சாத்தியமோ? (மத் 28:19,20)

எளியோர்க்குதவி : நிலையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரமே பெரிதும் பாதிக்கப்படும். வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் பெருகிக்கொண்டேயிருக் கின்றனர். அவர்கள் கூக்குரலை கேட்க எவருமில்லை. எளியோருக்கு இரங்கும் அரசாங்கத்தை தேவன்தாமே ஆசீர்வதிப்பார். (நீதி 19:17).

நாட்டின் ஒருமை : தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கும் ராஜ்யம் நிலைநிற்காது என்றார் இயேசு (மாற்.3:24). இனவெறியை அறவே ஒழிக்கவேண்டிய அரசியல்வாதிகள் அதற்குப் பதிலாக அதைக் கிளப்பி, எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்பதே அவர்கள் நோக்கு. வடக்கிற்கும் தெற்கிற்குமிடையே இன்றும் பகைமை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. ''மனிதர்மீது பிரியம்" என்பதே கிறிஸ்மஸ் தரும் செய்தி (லூக் 2:14). கொலையும் உடற்சேதமும் வேரறுத்து நாட்டை ஒருங்கிணைத்து நடத்தும் நல்ல தலைவர் களே நமக்குத் தேவை.

சமூகச் சீர்திருத்தங்கள் : தீண்டாமை, சிறுபிள்ளை மணம், வரதட்சணை வாங்குதல், உடன்கட்டையேறல், தேவதாசி பழக்கம், இது போன்ற சமூகத்தீங்குகளால் நமது சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கத்தைப்போல் துணிந்து இந்த அவமானப் பழக்கவழக்கங்களை எதிர்த்து ஒழித்து மக்களை இருளிலிருந்து வெளிக் கொணரும் தலைவர்கள் தேவை. இவர்கள் பதவிக்கும் பணத்துக்கும் பண்பாடுகள் பலியாகி விடக்கூடாதே.

நாட்டின் நலனுக்கு மேற்கூறியவை இன்றியமையாதவை. இதைவிட உங்களுக்குத் தோன்றும் வேறு பல ஜெபக்குறிப்புகளையும் சேர்த்து தேவனுக்கு முன்மன்றாடுங்கள். கூடி உபவாசித்து ஜெபியுங்கள். சிங்காசனத்தில் இருப்பவர் நமது தேவன் ஒருவர்தான்.

தேர்தல் ஆணையர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்காக ஜெபியுங்கள்

வாக்குசாவடிகளில் அட்டகாசங்கள் நடக்காதிருக்க வேண்டுங்கள். 

சகலமும் நியாயமாய் நடக்கவேண்டும். 

ஜெபித்தால் மட்டும் போதாது. செயலில்லா விசுவாசம் செத்தது. 

ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையையும் கவனித்து படியுங்கள்.

அனுபவமும் முதிர்ச்சியுமுள்ளவர்களோடு கலந்துரையாடுங்கள். வாக்குவாதம் வேண்டாம். 

பொறுப்பற்ற அரசியல்வாதிகள் அள்ளிவீசும் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே நம்பிவிடாதீர்கள்.

உரிமையும் பொறுப்பும் நிறைந்த தனிநபர் நீங்கள்.சிந்தியுங்கள். ஜெபியுங்கள். வாக்களியுங்கள்.



No comments: