கிறிஸ்தவர்களுக்கு மறுஜென்மம் அல்லது மறுபிறவி என்பது உண்டா?

கேள்வி : மத்தேயு 19:28ன்படி கிறிஸ்தவர்களுக்கு மறுஜென்மம் அல்லது மறுபிறவி என்பது உண்டா?

இதற்கான பதிலைத் தருமுன் ‘மறுஜென்மம்’ என்ற வார்த்தையானது முழு வேதாகமத்திலும் இரு இடங்களில் காணப்படுகின்றது.



ஒன்று, அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28)

இரண்டு, (தீத் 3:5) நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின் படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

இவ்விரண்டு வசனங்களிலிருந்து நாம் ஒரு கோட்பாட்டையோ, அல்லது தத்துவத்தையோ அமைக்க முடியாது. (இந்து பெளத்த மதங்களில் ஏழுபிறவி உண்டென நம்புவது வேதத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாது). எனினும் முழு சத்திய வேதாகமம் போதிக்கின்ற சத்தியத்தின்படி சில காரியங்களை கூறலாம் என விரும்புகிறேன்.

எமது மரணத்துக்கு பின்பாக இன்னுமொரு பிறப்போ, அல்லது அவதாரமோ இல்லை. அதாவது நாம் மரித்த பின்னர் மறுபடியும் எம்மால் பிறக்கமுடியாது. ஆனால் நமது மரணத்துக்கு பின்பாக எமது சரீரம் இல்லாமல் போகிறது. அதாவது எமது உடல் மண்ணோடு மண்ணாகத்தான் போகின்றது. அதில் எவ்வித சந்தேகம் இல்லை. ஆகவே இப்பொழுது இருக்கின்ற கண், காது, வாய், எலும்பு போன்ற மனித உடல் அவயவங்கள் மண்ணோடு மண்ணாகிபோனாலும் நான் இப்பொழுது எப்படியிருக்கிறேனோ அவ்வாறே நான் மரித்தபின்னர் எனது ஆவி ஆத்துமாவும் இருக்கும். ஆவி ஆத்மா அழிந்துபோகாத தன்மையுடையது.
ஒரு முட்டைக்குள் எப்படி உயிர் இருக்கின்றதோ அவ்வாறே எமது உடலுக்குள் நாம் இருக்கின்றோம். ஒரு குஞ்சு முட்டையை விட்டு வெளியே வருவதுபோல நாம் மரணத்திற்கு அப்பால் வெளிவரப்போகின்றோம். ஆகவே மரணத்தின் பின் எமக்கு ஒரு வாழ்வு உண்டு. அதனை மறுஜென்மம் என்றோ மறுபிறவி என்றோ அழைக்க முடியாது. காரணம் நான் அப்பொழுதும் நானாகவே இருப்பேன். ஒன்று பரலோகத்தில். அல்லது நரகத்தில்.

மறுபிறவி என்பதன் அர்த்தம் மீண்டும் பிறத்தல் என்பதாகும். மனிதனுக்கு இவ்வுலகில் ஒரு தடவையே வாழ சந்தர்ப்பம் இறைவனால் கிடைக்கிறது. ஆக மறுபிறவி என்ற சித்தாந்ததிற்கு இடமில்லை.

மறுஜென்மம்
மறுஜென்மம் என்ற வேதாகம வார்த்தை பிரயோகத்தின் அர்த்தமானது மறுபிறவி அல்ல. அது தேவனுக்குள்ளாக மீண்டும் பிறத்தல் என்ற அர்த்தத்தையே கொடுக்கின்றது. அந்த வகையில், மேலே கொடுக்கப்பட்டுள்ள வேத வசனத்தை மீண்டும் வாசித்து பார்க்கவும். அதாவது ஆண்டவர் ஆதியில் மனிதருக்கு (ஆதாம், ஏவாளுக்கு) கொடுத்திருந்த சுபாவத்தை மறுபடியும் கொடுப்பதாகும். எமது சுபாவம் பாவத்தினால் கறைப்பட்டு விட்டது. அதனை நாம் ஜென்ம சுபாவம் என்கிறோம்.

அதாவது பாவத்தினால் கறைப்பட்ட எமது சுபாவமே ஜென்ம சுபாவம் ஆகும். இந்த ஜென்ம சுபாவம் இருப்பதினாலேயே நாம் பாவம் செய்கிறவர்களாக இன்றும் இருக்கிறோம். கிறிஸ்துவானவர் எமக்குள்ளாக வரும்போது எமது ஜென்மசுபாவம் நீங்கி அவருக்குள்ளாக நாம் புது சிருஷ்டிகளாகின்றோம். நமது ஆவி, ஆத்துமா யாவும் தேவனுக்கு முன்பாக புதுசிருஷ்டிகளாகின்றன.
மறுஜென்ம முழுக்கு
ஆகவே மறுஜென்ம முழுக்கு என்பது ஞானஸ்நானத்தையும் எமது மனந்திரும்பின வாழ்வையும் குறிக்கின்றது. மறுஜென்மகாலம் என்பது நாம் கர்த்தரோடு வாழ்கின்ற எமது நித்திய நித்தியமான வாழ்வையே குறிக்கின்றது. கிறிஸ்துவுக்குள் பிறந்த ஒவ்வொருவனும் மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கைக்கு நேராகவே போய்க் கொண்டிருக்கின்றான்.


அவ்வாறே இயேசுவை கர்த்தராக தங்களுடைய வாழ்க்கையிலே சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, நல்வழி வாழ்ந்தவர்களுக்கு பரலோகமும், அப்படி வாழாத பொல்லாதவர்களாய் வாழ்ந்தவர்களுக்கு அக்கினி எரியும் நரகமும் கிடைக்கப் போகிறது. இதுவே உண்மையான சத்தியமாயிருக்கிறது. ஆகவே கர்த்தரை உங்கள் வாழ்க்கையிலே ஏற்றுக்கொண்டு, அவருக்குள் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்களானால், எத்துன்பம் கண்ணீர்கள், சோதனை வேளைகளிலும், கர்த்தர் உங்களை காத்து தமது செட்டையின் மறைவில் வைத்து பாதுகாத்தருளுவார்.

கர்த்தருடைய நியாயத்தீர்ப்பில், உங்களுடைய சரீரம் இல்லாவிட்டாலும் நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு முகங்கொடுப்பீர்கள். நாம் மரித்த பின்னரும் வாழ்வோம். அது தேவனுடனா? அல்லது நரகத்திலா என்பதில்தான் எமது நித்திய நித்தியமான வாழ்க்கை தங்கியுள்ளது. கிறிஸ்தவர்களின் விசுவாசமானது நாம் கிறிஸ்துவுடனே கூட நித்திய நித்தியமாக வாழுவோம் என்பதாகும்.

(கேள்விக்கான சுருக்கமான பதில், கிறிஸ்தவனுக்கு மறுபிறவி கிடையாது. மறுஜென்மமாக்கப்பட்ட நித்திய வாழ்வு உண்டு என்பதாகும்.).


என் இயேசு உன்னை தேடுகிறார்...
இடமுண்டா மகளே உன் உள்ளத்தில்....
ஆ ஆ ஆ மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தார்
மரித்த லாசருவை மீண்டும் தந்தார்
கதறிடும் மனிதா வருவாயா
உன் கர்த்தரின் பாதம் விழுவாயா
உன் கத்தரின் பாதம் விழுவாயா
என் இயேசு உன்னை தேடுகிறார்...
இடமுண்டா மகளே உன் உள்ளத்தில்....

1 comment:

Sivamjothi said...

மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_30.html