ஞானஸ்நானத்தின் போது பெயர் மாற்றுவது

கேள்வி : ஒரு விசுவாசி ''ஞானஸ்நானத்தின் போது பெயர் மாற்றுவது'' அவசியமானது தானா?

பதில் : கிறிஸ்தவமற்ற பின்னணிகளிலிருந்து மக்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறும்பொழுது அவர்கள் தங்களது பெயர்களை மாற்றவேண்டுமா, குறிப்பாக சில பெயர்கள் தேவர்கள், தேவதைகளுக்கடுத்தவை. எனவே சில தேவ ஊழியர்கள், ஞானஸ்நானத்தின் பின் பெயர்மாற்றம் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.


வேதத்திலும் பல பெயர்கள் குணநலன்களைக் குறிப்பிடுபவை (1சாமு.25:25. அப்.4:36). பிறந்தவேளையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டும் பெயர்கள் தரப்பட்டன (ஆதி.29:32-35) சிலவேளைகளில் எதிர்பார்ப் பையோ தீர்க்கதரிசனத்தையோ பெயர்கள் சுட்டிக் காட்டின (ஏசா.8:1-4. ஓசி.1:4). கோத்திரப் பிதாக்களின் காலத்தில் குணம், செயல், எதிர்காலத்தைக் குறிப்ப வையாகப் பெயர்கள் விளங்கின. நாளாவட்டத்தில் குறிப்பிட்டதொரு காரணமுமின்றி, வெறுமனே ஒரு நம்பிக்கையுடன், பெயர்கள் வைக்கப்படலாயின. அதன் பின்பாக, பெயருக்கும் அந்நபரின் குணத்திற்கும் சம்மந்தமேயில்லாத நிலையும் தோன்றியது (தகவல்: The New International Dictionary of the Bible).

பலவேளைகளில், மேலைநாட்டுப் பெயர்கள் யாவும் கிறிஸ்தவ பெயர்களென்றும் தமிழ்ப்பெயர்களை விட மேலானவை எனவும் கருதுவதுண்டு. உதாரணமாக. ''Miss Green" அல்லது ''Mr. Black" என்ற ஆங்கிலப் பெயர்கள் அவற்றின் தமிழாக்கமாகிய ''பச்சையம்மாள்" அல்லது ''கருப்பையா" என்பவற்றைவிட உயர்ந்தவையாக நமக்குத் தெரிகின்றன. ''முருகன்" என்ற இந்து தெய்வத்தின் பொருள் ''அழகு" என்பதாகும். இந்தப் பெயரை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்@ ஆனால் நமது மகனுக்கு ''அப்பொல்லோ" என்றும் மகளுக்கு ''டயானா" என்றும் பெயரிடத் தயங்கமாட்டோம். இவை இரண்டும் கிரேக்க தெய்வங்களின் பெயர்கள் என்பதை அறியோம்! (அப்.19:27,28). ''அப்பொல்லோ" என்றால் ''அழிக்கிறவன்" என்று பொருள். அது இளம் இசை தேவனொருவரின் பெயர். அப்போஸ்தலன் ஒருவனுக் கும் இப்பெயர் இருந்தது. அவன் அதை மாற்றவில்லை!

பெயர் மாற்றத்தை வலியுறுத்துவோர் அந்நிய தேவர்களின் பெயர்களை ''உச்சரிக்கவே கூடாது" என்று கூறும் யாத்.23:13, யோசு.23:7 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். விக்கிரக ஆராதனைக்கு முற்றிலும் விலகியிருக்கவேண்டுமென்பதே இவ்வசனங் களின் போதனையாகும். எழுத்தின்படி இவ்வசனங்க ளுக்கு அர்த்தங் கற்பித்தால், அஸ்தரோத், பாகால் போன்ற பெயர்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கும் சில வேதப் பகுதிகளை நாம் எப்படித்தான் வாசிக்க முடியும்? மட்டுமல்ல, இவ்விதப் பெயர்களுள்ள நபர்களை எப்படிக் கூப்பிடமுடியும்? நண்பர்கள், அரச அதிகாரிகள், உறவினர்கள், கட்சி தலைவர்களின் பெயர்களைக்கூட உச்சரிக்கமுடியாதே! பாபிலோனில் அந்த மூன்று எபிரேய இளைஞர்களுக்கு கொடுக்கப் பட்ட அஞ்ஞானப் பெயர்களை வேதம் தயங்காமல் பயன்படுத்துகிறது (தானி.1:7'. 3:26-28). முதல் புறவின விசுவாசியாகிய கொர்நேலியுவின் பெயரையோ, முதல் ஐரோப்பிய விசுவாசியாகிய லீதியாளின் பெயரையோ அப்போஸ்தலர்கள் மாற்றவில்லையே.

சவுல், பவுலாக மாறிவிட்டான் என்று நாம் பொதுவாகச் சொல்லுவதுண்டு. இது சரியல்ல. அவனது பெற்றோர் ஏற்கனவே இவ்விரு பெயர்களையும் அவனுக்குக் கொடுத்திருந்தனர். ''சவுல்" என்பது யூதப் பின்னணியில் ஒரு பொதுவான எபிரேயப் பெயர். அதன் பொருள் ''தேவனிடம் கேட்கப்பட்டது" என்பதாம். ''பவுல்" என்பது கிரேக்கப் பின்னணியிலுள்ள ரோமானிய பெயர் ஆகும். அதன் பொருள் 'சிறியது" என்பதாகும். ரோம குடிமகன் ஒருவனுக்கு பொதுவாக மூன்று பெயர்கள் இருந்தன (அப்.22:27,28). ஞானஸ்நானம், அபிஷேகம், ஊழிய அழைப்பிற்குப் பின்னரும் ''அப்போஸ்தலாகிய சவுல்" என்றே அழைக்கப்பட்டான். ஆனால் அப்.13:9 ல் இருந்து, ஒருவேளை அவன் புறவினத்தார் நடுவில் தீவிரமாய் ஊழியஞ்செய்ய இறங்கியதால், 'பவுல்" என்று அழைக்கப்பட்டான். இது ஒரு பெயர் மாற்றமல்ல.

பிள்ளை, ஆச்சாரி, நாடார், முதலியார் போன்ற சாதிப் பெயர்களை விட்டுவிடுவது நன்று. கிறிஸ்துவை விசுவாசித்து, அதனால் தங்கள் பெயரை மாற்றிவிடும் பொழுது, அவர்களது கிறிஸ்தவரல்லாத பெற்றோர் ''தாங்கள் அவர்களுக்கு பிரியமாய்க் கொடுத்திருந்த பெயர்களைப் பிள்ளைகள் தூக்கியெறிந்து தங்களை அவமரியாதைப்படுத்தி விட்டார்களே" எனக் கருதும் போதே அது தேவையில்லாத பிரிவினைக்கும், நற்செய்தி எதிர்ப்பிற்கும் வழிவகுக்கும். இதனால் சுவிசேஷம் தொடர்ந்து முன்செல்வது தடைபடலாம்.

மனந்திரும்புகின்ற நபர்களே தங்கள் பெயரில் ஒரு மாற்றத்தை வற்புறுத்திக்கேட்டால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளலாம். இங்கும் கூட அந்தந்த பிரதேச மற்றும் கலாச்சாரத்தை சார்ந்த பெயர்களையே தெரிந்து கொள்ள அவர்களுக்கு உதவவேண்டும். புதிய உடன்படிக்கையின் கீழ் நமக்கு வாக்களிக்கப்பட்டு இருப்பதெல்லாம் ''புதிய இருதயமும்" ''புதிய ஆவியும்" மட்டுமே (எரே.31:31-34. எசே.36:25-28). ஆனால், நாம் காத்திருந்தால் புதிய எருசலேமில் நம் எல்லோருக்கும் ஒரு புதிய ''பெயர்" கொடுக்கப்படும் (வெளி.3:12).

1 comment:

saravanaa said...

Actualy.. ur information is very very nice...