'ஞானஸ்நானம்" கட்டாயமா?

பதில்: ஆம். வேதம் அப்படித்தான் போதிக்கின்றது. ஞானஸ்நானமென்பது ஒரு மனிதனோ சபையோ கண்டு பிடித்ததல்ல. பிதாவாகிய தேவனே அதை நியமித்தார் (யோ1:33). குமாரனாகிய தேவன் அதைக் கட்டளையாகத் தந்தார் (மத்.28:19). ஆவியானவராகிய தேவனால் ஏவப்பட்டு அப்போஸ்தலர் அதை போதித்தனர் (அப் 2:38).
ஆதிச்சபை தவறாது அதை நிறைவேற்றியது. (அப் 2:41 8:12 9:18 10:47). ஞானஸ் நானம் பெறத் தேவையில்லாத ஒருவருண்டானால் அது இயேசுதான். யோவான்கூட அவரைத் தடுத்தான். ஆனால் அது 'எல்லா நீதியையும் நிறைவேற்ற" என்றார் இயேசு (மத் 3:15). தண்ணீரிலிருந்து அவர் வெளிவந்தபோது 'அவரில் பிரியமாயிருக்கிறேன்" என்று பிதா சாட்சியிட்டார் (லூக் 3:22). எனவே ஞானஸ் நானமானது ஓர் கீழ்ப்படிதலென்பது தெளிவு.

ஆன்மீக அனுபவம் எதுவும் ஞானஸ் நானத்திற்குப் பதிலாகாது. கொர்நேலியுவின் ஜெபம் கேட்கப்பட்டிருந்தது. அவனது தருமங்கள் அங்கீகரிக்கப் பட்டன. அவன் ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையிலும் பேசினான். அவனும் ஞானஸ்நானம் பெற பேதுரு கட்டளையிட்டான் (அப் 10:1,2,45,46,48).

ஞானஸ்நானமானது உள் அனுபவத்தின் வெளி அறிக்கையாகும். அது கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலோடு நாம் இணைவதற்கான தோர் சாட்சியாகும் (ரோமர் 6:3-6). அதை வெறும் சடங்கென்று எண்ணிவிடக்கூடாது. அது தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாகும் (1பேது 3:21).

ஒருவர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஞானஸ்நானம் பெற வேண்டும். பெந்தெகொஸ்தேயன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட 3000 யதரும் அன்றே ஞானஸ்நானம் பெற்றனர் (அப்.2:41). பிலிப்பி நகர் சிறைச்சாலைக் காரனும் கிறிஸ்துவை விசுவாசித்த அன்றிரவே ஞானஸ்நானம் பெற்றான் (அப் 16:33). கீழ்ப்படிய தாமதிப்பது, கீழ்ப்படிய மறுப்பதற்குச் சமமாகும்.

No comments: