விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாதா?

கே:விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாதா?

ப: ''விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாது'' என்ற உபதேசமானது வேதத்திலெங்கும் கிடையாது. வேதாகமத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட போதனை இது.


நல்ல மருந்துகள் பல மூலிகைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. அவை நமது ஆரோக்கியத்திற் கும் பெலத்திற்குமென்று தந்தவர் தேவனே(ஆதி. 1:29). தூதாயீம் பழத்தைச் சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புக்கூடுமென நம்பப்பட்டு வந்ததால், ராகேல் லேயாளிடம் அதைக் கேட்டாள்(ஆதி. 30:14). தேவன் எசேக்கியா அரசனின் பாவங்களை மன்னித்து, வாழ் நாளைக் கூட்டுவதாக வாக்களித்த பின்னர், அவன் குணமடைய மருத்துவ உதவி கொடுக்கச் சொன்னது ஏசாயா தீர்க்கத்தரிசிதான்(ஏசா. 38:5,17,21).

நோயுற்றோருக்குச் செய்யப்படும் மருத்துவப் பணியை இயேசு வரவேற்றார்(மத். 9:12). குற்றுயிராய் இருந்தவனின் காயங்களில் நல்ல சமாரியன் எண்ணெ யும் திராட்சரசமும் ஊற்றி கட்டுப்போட்டானே என்றார். (லூக்கா10:34). விசுவாசிகளுக்கும் ஊழியருக்கும் கனிவுடன் மருத்துவ உதவி செய்ததால் அல்லவோ லூக்காவை 'பிரியமான" வைத்தியன் என்று அழைத்த னர்(கொலோ. 4:14). தீமோத்தேயுவின் தீராத வயிற்று கோளாறுக்குக் கொஞ்சம் திராட்சைரசம் பருகும்படி பவுல் பக்குவமாய்ச் சொன்னான்(1தீமோ. 5:23). ''பூசி" என்றிருப்பது யாக்கோபு 5:14ல் பொதுவாக வியாதிக் காரர் உடலில் எண்ணெய் தேய்ப்பது அல்லது தடவுவதைக் குறிக்கும். (Aleipho என்ற மூலபதத்தின் பொருள் இதுவே). அதேவேளையில் எண்ணெயானது தேவனது வல்லமையின் பிரசன்னத்தையும் குறிப்பதா கும். எசேக்கியேலும் யோவானும் தங்கள் தரிசனங்க ளில் ஆரோக்கியத்தின் 'இலைகளை" கண்டார்கள் (எசே. 47:12. வெளி. 22:2).

''மருத்துவரை மட்டும்" தேடினதுதான் ஆசா செய்தத்தவறு (2நாளா. 16:12). சிகிச்சைக்காக தனது ஆஸ்திகளை செலவழித்துவிட்ட உதிரப்போக்குள்ள அப்பெண்ணை இயேசு கடிந்துகொள்ளவில்லை. மாறாக அவளை உற்சாகப்படுத்திக் கனிவுடன் குணமாக்கினார் (லூக். 8:43-48). மருத்துவத்துறையைத் தோற்கடிக்கும் எத்தனையோ வியாதிகள் இன்றும் உண்டு. அவைகளுக்கு அற்புதம் ஒன்றே வழி.

மருந்து சாப்பிட்டுக் குணமானால் கர்த்தருக்கு மகிமை எங்கே என சிலர் விவாதிக்கலாம். அது தவறு. நமது கைகளால் வேலை செய்கிறோம்@ அலுவலகம் நமக்குச் சம்பளம் கொடுக்கிறது(2தெச. 3:10-12). எனினும் நாம் அன்றன்றுள்ள அப்பத்திற்காக நமது தேவனை நன்றியுடன் துதித்து, அவரை யேகோவா-யீரே எனப் போற்றுவதில்லையோ? அப்படியே, மருத்துவர் நமது காயத்தைக் கட்டலாம்@ குணமாக்கு பவரோ தேவன் தான். ஏனெனில் அவரே யேகோவா-ரப்பா! (யாத். 15:26).

என்ன வியாதியானாலும் மருந்தே தொடாத விசுவாச சகோதர சகோதரிகள் உண்டு. இது உண்மையாகவே பெரிய விசுவாசம் தான். ஆனால் இதை மற்றவர்மீது திணிக்கக்கூடாது. ''உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன் மட்டும் இருக்கட்டும்"(ரோமர் 14:22). எல்லாருடைய விசுவாச ''அளவும்" ஒன்று போலிராது(ரோமர் 12:3). ஆயினும் தங்கள் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதத்தடுப்பு மருந்து கொடுக்காத பெற்றோர் தமது கடமையில் தவறுகின்றனர். நான் ஒருபோதும் மருந்தே எடுப்பதில்லை என்று எவரும் தம்பட்டமடித்து திரிய வேண்டியதில்லை. சிலவேளைகளில் பின்நாட்களில் மருந்தெடுக்கும் சூழ்நிலைக்குட்படும்போது இவர்கள் குற்றவுணர்வுடன் வாழ்வார்கள்.

பிரசங்கிமார்கள், போதகர்கள் மருத்துவரிடம் செல்லத் தயங்கி, மனிதருக்கு அதை மறைக்கத் தேவையில்லை. பிரசங்கிகளும் சாதாரண மனிதர்கள் தான்(அப். 14:15. கலா. 4:13). கண்பார்வை மங்கினால் ஜெபத்துடன் கண் டாக்டரிடம் செல்லுங்கள். அவர் உங்களுக்கு கண்ணாடி தருவார். வேதத்தைச் சிரமமின்றி வாசிக்கலாம்! பல்வலிக்கு ஜெபத்துடன் பல் டாக்டரிடம் செல்லுங்கள். அவர் சொத்தைப் பல்லைத் தட்டுவார். செயற்கைப் பல்லையும் கட்டுவார். வலியில்லாமல் பிரசங்கிக்கலாம்! மருத்துவர் தேவன் அருளிய ஈவாம்(எரே. 8:22).

No comments: