அமைதியாய் ஆராதிக்க முடியாதோ?


பதில்: சத்தமாய் ஆராதிப்போரைப் பார்க்கும்போதெல்லாம் உயர் ஆங்கிலிக்கன் பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்ட எனது மனதில் இதே கேள்விதான் எழுந்தது. ஆனால் ஆராதனை குறித்த வேதப் பகுதிகளின் ஆராச்சி, சத்தத்தை உயர்த்தி தேவனைத் துதிப்பதில் தவறு இல்லை என்பதை எனக்குப் புரிய வைத்துள்ளன.


~பலத்த காற்றில் கர்த்தர் இருக்கவில்லை..
பூமியதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை..
அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
அக்கினிக்கு பின் மெல்லிய சத்தம் உண்டாயிற்று (1இரா.19:11-13). உரத்த சத்தத்திற்கு எதிராகப் பொதுவாய் காட்டப்படும் வசனம் இதுவே. அப்படியானால், பெந்தேகொஸ்தே யன்று பலத்த காற்றோடும் அக்கினிமய நாவுகளோடும் ஆவியானவர் இறங்கினாரே அதற்கு விளக்கமென்ன? (அப்.2:2,3). அதற்கு சில நாட்களுக்குப் பின் சீடர் ஜெபித்துக் கொண்டிருந்த இடமே அசைந்ததே (அப்.4:31).

~அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள் என்று 46ம் சங்கீதம் சொல்கிறது (வச.10). ஆனால் தேவனுக்கு முன் ~கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள் என்று 47ம் சங்கீதம் சொல்கிறது (வச.1). ஆம், அமைதியாயிருக்க ஒரு காலமுண்டு: ஆர்ப்பரிக்க ஒரு காலமுண்டு.

குருத்தோலை ஞாயிறன்று திரள் கூட்டமான சீடரெல்லாரும் ஆனந்தமாய் மிகுந்த சத்தத்தோடு தேவனை புகழ்ந்தபோது பரிசேயரில் சிலர் இயேசுவிடம் சீடரை அதட்டச் சொன்னார்கள். ஆஹா, இயேசு அழகாய்ப் பதில் தந்தார். இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் (லூக்.19:37-40).

சங்கீதப் புத்தகம்தான், இஸ்ரவேலரின் கீதப் புத்தகமாகும். கெம்பீரமாய்ப்பாடி தேவனை ஆர்ப்பரிக்க அது திரும்பத் திரும்ப மக்களை அழைக்கிறது (சங்.66:1, 81:1). ~கெம்பீர சத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள் என்று அது குறிப்பிடுகிறது (89:15). இவ்விதமாய் ஆராதிப்பதெல்லாம் பழைய உடன்படிக்கையின் காலத்துக்குத்தான் உரியதென தள்ளிவிடாதிருப்போம். புதிய உடன்படிக்கையின் துவக்கமே ஆனந்த துதியொலிதான் தெரியுமா? பெந்தகொஸ்தேயன்று எவ்வளவு சத்தம் (அப்.2:1-6).

அன்று சாலமோன் மன்னன் முடிசூட்டப்பட்ட போது பூமி அதிரத்தக்கதாக மக்கள் மகாபூரிப்பாய் ஆர்ப்பரித்தார்கள் (1இரா.1:39,40). நாம் ஆராதிக்கும் போது சாலமோனிலும் பெரியவரையல்லவா முடிசூட்டுகிறோம்?

அமைதி, ஆர்பரிப்பு இவை இரண்டுமே நமது உணர்வுகளின் வெளிப்பாடுகளாகும். இவ்விரண்டிற்கும் அதினதின் இடமுண்டு. பொதுவாகவே தயங்காமல் வாய்திறந்து பேசுகிறவர்களுக்குச் சத்தத்தை உயர்த்தித் துதிப்பது இலகுவான காரியம். அடுத்த வகையினருக்கோ அப்படிச் செய்வது கடினம். ஆனால் ஆவியினால் நிரப்பப்பட்டபோது துதிப்பதில் ஒரு விடுதலை அடைந்துள்ளதாக இரண்டாம் வகையினரில் பலர் சாட்சியிட்டுள்ளனர். ஒருவரையொருவர் கண்டனம் பண்ணாமல் உற்சாகப்படுத்த வேண்டும். கூடுமானவரை சேர்ந்து ஆராதிக்க வேண்டும். இருவிதமாய் ஆராதிக்கக் கற்றுக்கொள்வது முதிர்ச்சியாகும்.

No comments: