''நாங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடலாமா? ''

டிசம்பர் 25 அன்று, நத்தார் தினம் என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அது சரியான திகதி தானா என ஏராளம் விவாதமுண்டு. ஆனால் அது காரியமல்ல. 


முதல் நத்தார் தினமன்று திரித்துவத்தின் இரண்டாம் நபர் மனுவுருவெடுத்து உலகில் அவதரித்தாரென்பது மறுக்கமுடியாத சத்தியம். அதனை குறிப்பிட்டதொரு நாளில் சிறப்பாய் நினைவுகூறுவதில் தவறில்லை. 'நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் கர்த்தருக் கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்@ நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளாதிருக்கிறான்" (ரோம. 14:6) எனவே, நத்தாரை கொண்டாடவோ, கொண்டாடாது இருக்கவோ எவருக்கும் முழுச் சுதந்திரமுண்டு. இவ் விதக் காரியங்களில் நாம் இனி ஒருவரையும் நியாயந் தீர்க்காதிருப்போமாக (ரோம. 14:13).

நத்தார் பண்டிகையை எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதே எமக்கு முக்கியமானது. கிறிஸ்தவ நாடுகள் பலவற்றில் கிறிஸ்துமஸ் என்றாலே குடியும், வெறியும், களியாட்டும் தான். பெத்லகேம் பாலகனுக்கு இது எவ்வளவு அவமரியாதை! புத்தாடை உடுப்பதிலும், பல்சுவை உணவு அருந்துவதிலும் தவறேதுமில்லை@ ஆனால்''தேவ இராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல. அது பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம்" என்பதை மறந்துவிடக்கூடாது (ரோ 14:17). 

முதல் நத்தார் தினமன்று மேய்ப்பர்கள் ''பிள்ளையைக் குறித்த சங்கதிகளை எங்கும் பிரசித்தம் பண்ணினார்கள்!" (லூக். 2:17). நாமும் அக் காலத்தைத் தீவிர நற்செய்திப் பணிக்குச் செலவிடுவோம்! பாட்டுப் பாடி சேரி சந்திகளுக்கும், கிராமங்களுக்கும், தெரு மூலைகளுக்கும் சென்று கிறிஸ்தவரல்லாதோருக்குக் கிறிஸ்துவின் செய்தியைப் பறைசாற்றுங்கள்!

மட்டுமல்ல, அந்த மேய்ப்பர்கள் தேவனைப் ''புகழ்ந்தும் துதித்தும்" திரும்பினார்கள் (லூக். 2:20). ''தேவனருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக" அவரைத் துதித்து உளமாற வாழ்த்தும் நாட்களாய் நத்தார் காலம் அமையட்டும் (2கொரி.9:15). கிறிஸ்துவின் முதல் வருகையைச் சிறப்பாய் நினைவுகூருவதோடு அவரது இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படும்படி தீவிரிப்போம். ''உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக" என ஒவ்வொரு கோத்திரமும், மொழியினரும், மக்கள் கூட்டமும் முழங்கட்டும்! (வெளி. 7:9. லூக். 2:14). 

நன்றி : சத்தியவசனம் சஞ்சிகை.

No comments: