கிறிஸ்தவர்கள் ''லாட்டரிச்சீட்டு'' வாங்கலாமா?

1.லாட்டரி என்பது சூதாட்டம்தான். 
2. லாட்டரிகள் பேராசையைத் தூண்டிவிடும்.
3. தொடக்கத்தைக் குறித்து எச்சரிக்கை!
4. செலவுகளை மாத தொடக்கத்திலேயே திட்டமிடுங்கள் 



லாட்டரி என்பது சூதாட்டம்தான். அரசு நடத்தும் பரிசுச் சீட்டுத்திட்டங்கள் அதிகாரபபூர்வமான சூதாட்டம், அவ்வளவுதான்! ஒரு அரசாங்கம் சாராயக்கடைகளை அடைக்கும். அடுத்துவரும் புதிய அரசாங்கம் தனது அமைச்சர்களைக் கொண்டே அக்கடையை திறக்கும். நிறைவான நீதிநெறிகளென்று சில அரசுகளுக்கு ஒன்றுங் கிடையாது! சூதாட்டமானது கிறிஸ்தவக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது. ''சூதாட்டக் காரர் நாளாவட்டத்தில் மூடநம்பிக்கையினராகவே மாறுவர். தேவனது ஏகாதிபத்தியத்தை மறந்த அவர்கள் விதியின் விளையாட்டு எனக் கூறி, எவ்வழியிலாவது அதைத் தங்களுக்குச் சாதகமாக்க ஓடி அலைவர்" என ஒரு பத்திரிகைத் தலையங்கத்தில் வாசித்தேன்.

லாட்டரிகள் பேராசையைத் தூண்டிவிடும். சீக்கிரம் பணக்காரராகும் தத்துவத்தைக்குறித்து வேதம் கண்டிப்பாய் நம்மை எச்சரிக்கிறது. ''ஆரம்பத்தில் துரிதமாய் கிடைத்த சுதந்திரம் முடிவில் ஆசீர்வாதம் பெறாது"(நீதி.20:21). ''உண்மையுள்ள மனிதன் பரிப+ரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். ஐசுவரியவானாவதற்கு தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்"(நீதி.28:20). லாட்டரி பரிசு பெற்ற பலரது பரிதாபமான முடிவுகளைக் கவனிக்கும்போது இவ் வசனங்கள் திரும்பத்திரும்ப நிரூபிக்கப்படுவதை காணலாம் (1தீமோ.6:9,10). ஆனால் தேவன் ஒருவனைச் செல்வந்தனாக்கினால், அவர் அதனோடே வேதனையைக் கூட்டார்! (நீதி 10:22).

தொடக்கத்தைக் குறித்து எச்சரிக்கை! லாட்டரி யில் பங்கேற்போர் பொதுவாக முதலில் ஒன்றிரண்டு சீட்டுகள்தான் வாங்குவார். ரூ.100 அல்லது ரூ.1000 பரிசு விழுந்துவிட்டால் போதும். இன்னும் கூடுதல் சீட்டு களை வாங்கச் சோதனை தலைவிரித்தாடும். ஐயோ, கணவன்மாரும் தகப்பன்மாரும் லாட்டரிக்கு அடிமையாகிவிட்டதால் தின்ன சோறு இல்லாது தவிக்கும் குடும்பங்கள் எத்தனை! பணம் என்பது கடல் நீர் போன்றது. குடிக்க குடிக்கத் தாகம் கூடுமேயொழிய தணியாது. 

லாட்டரிகள், லட்சங்களைக் கொள்ளையாடி ஒரு சிலரையே லட்சாதிபதிகளாக்கும். லாட்டரி சீட்டு வாங்குவோர் பெரும்பாலும் வருமானத்தில் நடுவகுப்பு அல்லது அதற்கு கீழ்வகுப்பினரே. நாம் ஏழைகளின் தேவனை ஏளனப்படுத்தலாமா? (நீதி 22:16). தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், பணக்காரர் லாட்டரித் திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். பரிசுச் சீட்டு விழுந்துவிட்டால், பாதியை ஆண்டவருக்கு கொடுத்துவிடுமோமென்று சில கிறிஸ்தவர்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள்.பிரியமானவர்களே, அசுத்தமான பணத்தை தேவன் அருவருக்கிறார். ''இது பரிசுச்சீட்டில் விழுந்த பணம்" என்று யாராவது காணிக்கை கொண்டு வந்தால் பிரசங்கிமாரும் மேய்ப்பர்மாரும் அதை ஏற்றுக் கொள்ள கண்ணியமாக மறுத்துவிடவேண்டும்.

வரவு செலவினை சமாளிக்க முடியாவிடில் கூடுதல் ஏதாவதொரு வேலைசெய்ய முயற்சியுங்கள். செலவுகளை மாத தொடக்கத்திலேயே திட்டமிடுங்கள். இறையரசையும் அவரது நீதியையும் முதலாவது தேடுங்கள். அன்றன்றுள்ள ஆகாரத்தையும் அதன்மீது ஆசீர்வாதத்தையும் தேவனிடம் கேளுங்கள். ''போதுமெனும் மனதோடுள்ள தேவபக்தியே மிகுந்த ஆதாயம். நாம் இவ்வுலகத்தில் கொண்டுவந்தது ஒன்றுமில்லை. இங்கிருந்து கொண்டு செல்வது ஒன்றுமில்லையென்பதும் நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் இருந்தால் அதுவே போதுமென்றிருக்கக்கடவோம்" (1தீமோ.6:6-8).

நன்றி : இலங்கை சத்தியவசனம் சஞ்சிகை.

No comments: